பாக்தாத்தில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று, நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் புதிய பிரதமர் தலைமையிலான அரசு அமைவதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் தலைமையில் அரசு அமைந்திட விடாமல், எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியை உருவாக்கி பெரும்பான்மையை நிரூபித்து ஈராக் பிரதமர் பதவிக்கு முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று முகமது அல்-சூடானி தலைமையில் புதிய அரசு அமைவதை தடுக்கவே நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அப்போது எம்.பி.க்கள், உறுப்பினர்கள் யாரும் வளாகத்தில் இல்லை.
இப்போதைய பிரதமர் முஸ்தபா, போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி தடுக்க முயன்றனர். எனினும் அவற்றை எல்லாம் தாண்டி அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களை கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது பற்றி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது. இந்த நிலையில் முஹம்மது புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். முன்னதாக கடந்த புதன்கிழமை, பல போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் பாட்டு பாடியும், நடனமாடியும் அங்குள்ள மேஜைகளில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.