கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, ஆங்கில – தமிழ் அகராதி யொன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார். இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.
” தொழுது உண்ணுஞ் சுவை நிரம்பிய பொருளை விட, உழுது உண்ணும் சுவை இல்லாத பொருளும் இனியது என்பது தமிழர் கொள்கை. சிறிதயவு கூழே பெறினும், அவரவரது முயற்சியாலும் அவரவரது உழைப்பாலும் பெற்றால், தன் முயற்சியின்றிக் கிடைக்கும் அமிழ்தத்தினும் அது சிறந்தது என்பது தொன்று தொட்டு வரும் தமிழர் கருத்து.
” தெண்ணீர் அடுபுற்கை யாயினும்தாள் தந்தது
உண்டலி னூங்கினியது இல்”
என்றார் திருவள்ளுவர். உழுது உண்டு வாழ்கின்றவரே “வாழ்பவர்” எனச் சிறப்பித்துச் சொல்லத்தக்கவரென்பது அவர் கருத்து.”
(தமிழ் காட்டும் உலகு)