பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிக் குவித்தவர்.
” கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும், அரசன் வாழ்ந்த அரண்மனையையும் குறித்தது. இதனால் அரசன் வாழ்ந்த அரண்மனையும், கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன, என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களை யுடையவை. வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை. வாயில்களுக்குத் துருப்பிடியாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சாந்து பூசப் பெற்ற மாடங்கள் உயரமாகக் கட்டப்பட்டிருந்தன.”