ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்!

பாஜக அரசு 3வது முறையாக பதவியேற்றதற்குப் பிறகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்த பேசிய பின் நேற்று அவர் தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் போதைப்பொருள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அடுத்து சென்னையின் காவல் ஆணையராக இருந்த சந்திப் ராய் ராத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். இது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கை கவனிக்க டேவிட்சன் தேவசீர்வாதம் ஏடிஜிபி ஆகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறைக்கு ஆளுநர் ரவி அனுப்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்திருக்கும் நிலையில் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பாஜகவினரும் அதிமுகவினரும் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ரவி கடந்த 15ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் அவரது மனைவியுடன் டெல்லி சென்றார். ஆளுநர் தனிப்பட்ட பயணமாகவே டெல்லி சென்றதாக கூறப்பட்டது. அதே நேரத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்கவில்லை. இந்த நிலையில் 5 நாள் பயணமாக அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் இருவரையும் சந்திப்பார் என கூறப்பட்டது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். தொடர்ந்து நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் நிகழும் கொலைகள், கள்ளச்சாராய மரணம் உள்ளிட்டவை குறித்து ஆளுநர், அமித் ஷாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது 5 நாள் பயணத்தை முடித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தொடர்ந்து கார் மூலம் அவர் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பில்ம் அந்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.