விலகி நில் கிருமியே – டாக்டர். தாரா ஃபிரான்சிஸ், எம்.டி.

நமது உடம்பில் கைகள் மூலமாகத்தான் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதாக 1860-ஆம் ஆண்டிலேயே மருத்துவர்கள் கண்டறிந்தனர். அப்போதிலிருந்தே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் பழக்கத்திற்கு வந்தன. ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்கு பாதுகாப்புடன் நடந்து கொள்கிறோம்?

ஆரோக்கியமான நமது தோலில் எண்ணிலடங்காத பாக்டீரியா, பூஞ்சனம் மற்றும் வைரஸ் நுண்ணுயிரிகள் உள்ளன. இவை நிரந்தரமாக தங்கியிருப்பவை, பரவுபவை என இரண்டு வகைப்படும். தங்கியிருக்கும் நுண்ணுயிர்கள் நமது தோல் பகுதியிலேயே அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்து பெருகிக் கொண்டே இருப்பவை. இந்த நுண்ணியிரிகள் நமது தோலில் ஏற்படும் வெடிப்புகளின் வழியாக உடலுக்குள் செல்லும் போதுதான் நோயை ஏற்படுத்துகின்றன. விரல் நகங்கள், அதைச்சுற்றியுள்ள பகுதிகள், விரல் மடிப்புகள், வேர்வை நாளங்கள் மற்றும் மயிர்க் கால்களிலும் இவை தங்கியிருக்கும்.

இந்த நுண்ணுயிர்கள் எப்போதுமே நம் உடலில் தங்கியிருப்பதால் நமது தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க முடிவதில்லை. தோலை அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தையும் நீக்க முயல்வது சாத்தியமல்ல.

பரவும் நுண்ணுயிர்கள் தோலிலேயே தொடர்ந்து தங்கியிருப்பதில்லை. இவை தோலின் மேல் பகுதியில் பரவலாகத் தங்கியிருந்து நோய்களை பரப்பும். கைகளில் இவை குறைந்த நேரமே உயிர் வாழும். கைகளின் நேரடித் தொடர்பு காரணமாக பரவும் இவை, விரல் நுனிகளிலேயே அதிக எண்ணிக்கையில் இருக்கும். பரவக் கூடிய இந்த நுண்ணுயிர்களை நீர், சோப் போன்றவை மூலம் எளிதில் நீக்க முடியும்.

மோசமான கழிவறை பழக்க வழக்கங்கள் காரணமாகவும், கைகளின் மூலம் இக்கிருமிகள் பரவலாம். எனவே உணவு உண்ணும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் உணவு உட்கொள்ளும் போது, எளிதில் நம் உடலுக்குள்ளும் சென்று விடுகிறது. சுத்தப்படுத்தும் சாதனங்கள், சோப், கிருமிகளை நீக்கும் திரவங்கள் போன்ற பல உபாயங்கள் சந்தைகளில் கிடைத்தாலும் கூட மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.

பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கழிவறையைப் பயன்படுத்தும் பெண்களில்
90 சதவீதம் பேர், மற்றொரு பெண்மணி அந்த இடத்தில் இருந்தால் மட்டுமே தங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய் கின்றனர் என்று தெரியவந்தது. மேலும் குழந்தைகள் மலம் கழித்த பின் கழுவி விடும் பெண்களின் கையில் அதிக அளவில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நமது கைகளை சுத்தமாக வைத்திருக்க இன்றைய நவீன சாதனங்களான கழிவறைகளில் பொருத்தப்படும் தானியங்கி சுத்தப் படுத்தும் கருவிகள், கிருமிகளை அழிக்கும் கழிவறைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். சுத்தமாகக் கழுவிய பிறகு, தொடர்ந்து பயன்படுத்தி வரும் துவாலைகளில் துடைப்பது, அழுக்கான கைக்குட்டைகளை பயன் படுத்துவது போன்றவற்றாலும் கிருமிகள் மீண்டும் கைகளை ஆக்கிரமிக்கும். உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும். நமது வாழ்க்கையில் ஆரோக்கியத்தை செப்பனிடும் மிக எளிதான இது போன்றவற்றை கூடவா நம்மால் மேற்கொள்ள முடியாது?