பேன் பிரச்சனை தொல்லை நீங்க – டாக்டர். ஆர். சதீஸ்குமார்

ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும் என்பார்கள். பொதுவாக, பேன் தொல்லை அருவருப்பை உண்டாக்கும் பிரச்சினை.

பிறர் முன்னிலையில் நாகரீகம் மறந்து தலையை சொறிய வைப்பதும், யாரும் பார்க்காத நேரத்தில் ஆடையில் இருந்து எடுத்து நச்.. என நசுக்குவதும் பலரிடம் காணப்படும் பழக்கம். இந்தப் பழக்கத்தை வித்திட்டு வளர்க்கும் பேன் தொல்லையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, தொப்பி, தலையணை போன்றவற்றலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.

மனிதரை அண்டிப் பிழைக்கும் சிறு பூச்சி தான் பேன். இவை மனிதனின் உடற்பாகத்தில் காணப்படும். இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல இவற்றின் பெயர்களும் மாறுபடும்.

தலைப்பேன், சீலைப்பேன், அடி வயிற்றுப்பேன்.

பேன் ஒரு சிறகற்ற பூச்சிவகையை சேர்ந்தது. மேலும் கீழும் தட்டையான பகுதிகளால் ஆனது. அதனுடைய தலை ஒரு பேரிக்காய் போன்ற அமைப்பை உடையது. தலையில் ஒரு தும்பிக்கை, இரண்டு உணர்ச்சி உறுப்புகள், இரண்டு பலகூறுகள் உள்ள கண்கள் முதலியன உள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் மூன்று கால்கள் வீதம் ஆறு கால்களைக் கொண்டது. கால்களின் முனையில் வளைந்த நகமிருக்கும். இதன்மூலம் முடியை நன்றாகப் பற்றிக்கொள்ள முடியும். ஆண் பேனைவிட பெண் பேன்தான் உருவில் பெரியது.

ஈர் அல்லது பேனின் முட்டை ஒரு சோளக்கதிர் போன்ற உருவமுடையது. அதன் முனையில் ஒரு மூடி போன்ற அமைப்புள்ளது. இதன் வழியே முட்டையிலிருந்து வரும் குஞ்சு வெளிப்படும்.

பேன்களின் வகைகளையும், அவை பரப்பும் நோய்களையும் தெரிந்து கொள்ளுங்களேன்.

பேனின் ஆயுள் ஒரு மாதமாகும். இது தினந்தோறும் 7 முதல் 10 முட்டைகள் வரை இடுகிறது. எட்டு நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படும். இது எட்டு நாட்களுக்குப் பிறகு வயதுவந்த பேனாக மாறுகிறது.
சுத்தமான தலையில் பேன் தங்காது. அதிக காய்ச்சல், அதிக உழைப்பு போன்றவற்றினால் ஏற்படும் வெப்பத்தினால் இவை உடலில் தங்காது. உயிரற்ற உடலிலும் பேன்கள் தங்காது.

தலைப்பேன்

தலைப்பேன் வெளுத்த பழுப்பு நிறம் உடையது. பெண் பேன் 3-4 மி.மீ. நீளமுடையது. இவை ரத்தத்தை உறிஞ்சுவதில் வல்லவை. தங்கள் உடல் வெடித்துப்போகும் அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சும். தோலைத் துளைத்து, ரத்தத்தை உறிஞ்சும் போது நஞ்சு போன்ற திரவத்தை உற்பத்தி செய்யும். இது அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

நோய்

பெண்களை பெரிதும் பாதிக்கும். ஆண்களில் அசுத்தமானவர்களிடையே காணப்படும். குழந்தைகளிடம் பள்ளிப் பருவத்திற்கு முன்பு காணப்படும். நாளடைவில் பையன்களிடையே குறைந்து பெண்களிடம் அதிமாகும். தலைப்பேன் தலைமுடியிலும், தாடியிலும் காணப்படும்.

ஒரே சீப்பு, ஒரே பிரஷ பயன்படுத்துவோர், நீண்ட தலைமுடி, அடிக்கடி முடியை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள் ஆகியோருக்குப் பரவுகிறது.

நோயின் முக்கிய அறிகுறி அரிப்பு. தலையின் பின்பக்கத்திலும், பக்கவாட்டிலும் அதிகமாக ஏற்படும். சொறிவதால் நீர்க்கசிவும், பக்கு கட்டுதலும் ஏற்பட்டு, அவற்றின் மீது மற்ற நோய்க்கிருமிகள் படர்ந்து தலையின் பின்பகுதியிலும், கழுத்துப்பகுதியிலும் நெறிக்கட்டிக் கொள்ளும். நோய் அதிகமானால் தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டும் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் காணப்படும். மார்பிலும், முதுகிலும் சிறுசிறு கொப்புளங்கள் காணப்படும்.

சிகிச்சை

தலைமுடியை ஒட்ட வெட்டவேண்டும். மொட்டை அடிப்பது நலம். சல்போனமைடு மாத்திரைகளை வயதுக்கு ஏற்றவாறு மருத்துவர் பரிந்துரையின் பேரில் கொடுக்க வேண்டும். பென்ஜயில் பென்ஜயேட் – 25 மருந்து, டி.டி.டீ – 5 தினந்தோறும் ஐந்து நாட்கள் வரை தடவி முடியை கழுவ வேண்டும்.

சீலைப்பேன்

தோலில் வாழாமல் மடித்துத் புதைக்கப்பட்ட உடை ஓரங்களில் வாழ்கின்றன. ரத்தம் உறிஞ்ச மட்டுமே உடைகளைவிட்டு தோல்மீது வந்து ரத்தத்தை உறிஞ்சி உண்டுவிட்டு திரும்பவும் உடைக்குத் திரும்பும். உடல் வெப்பத்தினால் ஈர்கள் பொறிக்கும். உடம்பில் அதிகமுடி உள்ளவர்களிடம் இப்பேன்களைக் காணலாம்.

நோய் அறிகுறி

பேன் கடித்த இடத்தில் தோல் சிவந்து காணப்படும். ரத்தப் பள்ளப் புள்ளியுடன் கூடிய பரு காணப்படும். தாளமுடியாத அரிப்பு உண்டாகும்.

இப்பேன் கடிக்க ஏற்ற இடம் தோள் பட்டை, உடல் பாகம், பிட்டம் முதலியன. அரிப்பினால் சொறியப்பட்டு நகக்காயங்களும், ரத்தக்கசிவும், பக்குகளும் இருக்கும். கவனிக்கப்படாத நிலையில் பாக்டீரியாக்கள் தொற்றி தொற்று நோய்களை உண்டாக்கும்.

சிகிச்சை பெறாத நோயாளியின் தோல் கறுத்து, உலர்ந்து, செதில் செதிலாக, ஆங்காங்கே பக்குகளுடன், சொறிந்த புண் மற்றும் வடுவுடன், கரப்பான் நோயுடன் காணப்படும்.

சீலைப்பேன் நோய் கும்பல் கும்பலாக கூடி வசிப்போரிடையேயும், அடிக்கடி துணிகளை மாற்ற முடியாதவர்களிடையேயும், அதிக துணிகளை உடுத்திக் கொண்டு குளிர்ப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையேயும், ராணுவத்தினரிடையேயும் காணப்படும். சுற்றுப்புற சுகாதார மற்றவர்களிடமும், வசதியில்லாதவர்களிடமும் இது காணப்படும்.

சிகிச்சை

சிகிச்சை முறை எளிதானது. துணி மணிகளைச் சுத்தமாக துவைத்து, சூடான சலவைப்பெட்டியினால் தேய்த்தாலே பேன்களும் ஈறுகளும் அழிந்துவிடும்.

10 டி.டி.டீ. பவுடரையும் தூவி துணிகளை மடித்துவைத்திருந்தாலும் பேன்களும் ஈறுகளும் அழிந்துவிடும்.

அடிவயிற்றுப்பேன்

இந்தப் பேன் உருவத்தில் நண்டு போன்ற அமைப்பு உடையதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கும். முன்னங்கால்கள் மெலிந்தும், பின்னங்கால்கள் தடித்தும் நண்டின் கொடுக்கு போன்ற அமைப்பையும் இப்பேன் கொண்டுள்ளது. இதனால் அடிவயிற்றுச் சுருண்ட முடிகளை இவைகள் நன்றாகப் பற்றிக்கொள்ள ஏதுவாகிறது. இது தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் மற்ற பேன்களைப் போல ஒத்துள்ளது.

இப்பேன் அடிவயிற்றில் இருக்கும் சுருண்ட முடிகளிடையே காணப்படும். சில சமயங்களில் கண் இமைகளிலும், அக்குள் மயிர்க்கால்களிலும், நெஞ்சு முடிகளிலும் காணப்படும். இவை இரு முடிகளைத் தம்முடைய கால்களால் இறுகப்பற்றிக்கொண்டு அதன் நடுவில் தலையை தோலில் புதைத்துக்கொண்டு இருக்கும்.

நோய் அறிகுறிகள்

நோய் அறிகுறிகள் சுலபத்தில் வெளியில் தெரியாது. இப்பேன் நோய் இருப் பவர்களிடத்தில் மேக்குலே செருலே என்ற சிறிய கருமையான இரும்பு சாம்பல் நிறத்திட்டுக்கள் ஒரு செ.மீ. அளவில் நெஞ்சு மற்றும் வயிறு,தொடைகள், கரங் கள் ஆகிய இடங்களில் காணப்படும்.

சிகிச்சை

அடிவயிற்று முடியை அகற்றுவது, 10 டி.டி.டீ.பவுடரை தெளித்து வைப்பது, பென்ஜயில் பென்ஜயேட் களிம்பை தடவி வைப்பது. பேன் தொல்லையும் தவிர்க்க முடியாத பிரச்சினைதான். கூச்சப்படாமல் மருத்துவ உதவியை நாடுவதுதான் பேன் தொல்லையால் வருத்தப்படுவோருக்கு உள்ள நல்ல வழி!