குறைபாடு ஏற்படுவது ஏன்? – டாக்டர். கண்ணன்

ஆளும் வளரணும் ; அறிவும் வளரணும் – அதுக்கு அயோடின் சத்து வேணும்

அயோடின் சத்து மனித உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இச் சத்து நாம் உண்ணும் உணவு, குடிநீர் போன்றவற்றின் மூலம் இயற்கையாகவே கிடைக்கிறது. இவ்வாறு இயற்கையாக கிடைக்கும் அயோடின் சத்துக் குறைந்தால் அல்லது போதிய அளவு கிடைக்கா விட்டால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.

தாயின் வயிற்றில் சிசு வளரும் காலத்திலிருந்து தொடங்கி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைச் சீராக்குதல், உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு அயோடின் சத்து மிக அவசியம். தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் தடையின்றிச் சுரக்கவும் அயோடின் சத்து தேவைப் படுகிறது.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றில் இருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ஆனால் மண்ணரிப்பு ; விவசாயிகள் பயன் படுத்தும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் மாற்றம் ; கால இடை வெளியின்றி திரும்பத் திரும்ப பயிடுவததால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் உணவிலிருந்தும் நீரிலிருந்தும் இயற்கையாகப் பெறப்படும் அயோடின் சத்து, போதிய அளவு கிடைப்பதில்லை.

பற்றாக் குறையால் ஏற்படும் நோய்கள்:

  • அயோடின் பற்றாக்குறையால் கருச்சிதைவு, குறைப்பிரசவம், வயிற்றில் சிசு இறந்து போதல், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றி குழந்தை பிறத்தல், தாய்ப்பால் வற்றிப்போதல்.
  • குழந்தைப் பருவத்தில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் உடல், மன வளர்ச்சி பாதிக்கப் படும். கிரெடின் குழந்தை, மாறு கண், காது கேளாமை, கால் ஊனம், சிசு மரணம், போதிய உடல் வளர்ச்சியின்மை, அறிவு வளர்ச்சிக் குறைவு ஆகியவை ஏற்படும்.
  • வளரும் பருவத்தில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால், இன உறுப்புகள் வளர்ச்சிக் குறைவு, சோம்பியிருத்தல், மந்தமான போக்கு, பசியின்மை, வறண்ட தோல், உடல் பருமன், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை, தைராக்ஸின் குறைபாடு , முன்கழுத்துக் கழலை ஆகிய குறைகள் ஏற்படும்.
  • குறிப்பாக அறிவுத் திறன் குறைவதால் கல்வி, வேலை வாய்ப்பு, வேலைத் திறன், பொருளாதார முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் போன்ற யாவும் தடைபடுகின்றன. இவற்றைக் கட்டுப் படுத்த வாழ் நாள் முழுவதும் ஹார்மோன் சிகிச்சை எடுக்க வேண்டும். உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி குறைவதால் உற்றார், உறவினர் கைவிட்டு சமூகம் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது.

முன் கழுத்துக் கழலை:

முன் கழுத்துக் கழலை என்பது அயோடின் பற்றாக் குறையின் முற்றிய நிலையாகும். முன் கழுத்துக் கழலை நோய் வெளியே தெரியும் நிலையில் அயோடின் உப்பை உபயோகிக்கத் தொடங்கினால் நோயைக் கட்டுப் படுத்த மட்டுமே உதவும்.

அயோடின் கலக்கப் படாத உப்பு விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது. அயோடின் சத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக அயோடின் நாள் (அக்டோபர்-21) கொண்டாடப்படுகிறது