ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது: கமல்ஹாசன்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது; அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினர். அக்கலையை நாம் சரியாக கையாள வேண்டும். ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்றார்.

இயக்குநர் வெற்றிமாறனின் இந்த கருத்து மிகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி மாறனின் கருத்தை பாஜக தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் வெற்றி மாறனின் கருத்து சரியானது என்றே பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல்ஹாசனிடம் வெற்றி மாறனின் கருத்து தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருக்கின்றனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும். இந்தப் படத்தின் தொடக்கத்தில் பொற்காலம் பற்றி என் குரலில் ஒரு வசனம் வரும். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட உணர்வு எனக்கு ஏற்படுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக பெருமிதம் கொள்ள வைக்கிறது.

இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம் என இருந்தது. சைவம் என இருந்தது. சமணம் என்ன இருந்ததே தவிர அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர்.. தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரி. எங்களுக்கு வெவ்வேறு மதங்கள் இருந்தன. கி.பி.8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் பண்றார். இதெல்லாம் சரித்திரம். அந்த சரித்திரத்தைப் பற்றி இங்க சொல்லக் கூடாது. இந்த படம் சரித்திரப் புனைவுபற்றியது. இங்கு சரித்திரத்தை திணிக்க வேண்டாம். மொழி பிரச்சனையை இங்க கொண்டுவரவும் வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.