சூப்பர்ஸ்டார் ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்பு பின்வாங்கியது ஏன் என்ற காரணத்தை முதல் முறையாக கூறியுள்ளார்
ரஜினி தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருகின்றார். இந்த நாற்பது ஆண்டுகளில் கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ரஜினியும் அரசியலுக்கு வரேன், வரவில்லை என ஒரு தீர்மானமான முடிவை எடுக்காமல் இருந்து வந்தார். இதுவே ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு பிறகு வந்த நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட துவங்கிவிட்டனர். எனவே ரஜினியின் ரசிகர்களும் தலைவர் அரசியலுக்கு வரவேண்டும், சினிமாவில் சாதித்ததைப்போல அரசியலிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என நினைத்தனர். ஆனால் சினிமாவிலேயே இவ்வளவு அரசியல் இருக்கின்றதே, அரசியல் எப்படி இருக்குமோ என்று ரஜினி யோசித்திருக்கமாட்டாரா என்ன ? எனவே கடந்த பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவதா வேண்டாமா என ஆழமாக யோசித்து வந்தார்
கடந்த 2017 ஆம் ஆண்டு தன் ரசிகர்களை சந்தித்த ரஜினி நான் அரசியலுக்கு வருவதை பற்றி விரைவில் அறிவிப்பேன் என்றார். அந்த ஆண்டு தான் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கினார். எனவே ரஜினியும் அரசியலில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல ரஜினி அரசியல் பற்றி தெளிவாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து ரஜினி மீண்டும் அரசியலில் இறங்குவதை பற்றி ஆலோசித்து வருவதாக கூறினார். எனவே மீண்டும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ரஜினி தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் களமிறங்கப்போவதில்லை என்ற முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்
ரஜினி அரசியலுக்கு வருவார், சினிமாவில் சாதித்ததைப்போல அரசியலிலும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த முடிவு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் ஒரு சில ரசிகர்களோ இதுதான் சரியான முடிவு. ரஜினிக்கு அரசியல் செட் ஆகாது, மேலும் அரசியலில் களமிறங்கிய பல நடிகர்கள் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் திணறி இருக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தான் ரஜினி இந்த முடிவை எடுத்திருப்பார் என அவரின் முடிவுக்கு சில ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் அரசியலில் களமிறங்காத ரஜினி தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார்
இந்நிலையில் சென்னையில் ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஜினி தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெறும் தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
வெங்கையா நாயுடு ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அவர், கஷ்டப்பட்டு படித்து ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளைஞர் அமைப்பின் தலைவரானார். பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்ட வெங்கையா நாயுடு, பா.ஜ.க.வின் மாநில தலைவராகவும், பின்னர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். இதையடுத்து மத்திய மந்திரியாகவும், இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் வெங்கையா நாயுடு பதவி வகித்தார். இந்த அரசியல் பயணத்தில் வெங்கையா நாயுடு மீது ஒரு சிறு களங்கம் கூட கிடையாது. கட்சிகளைக் கடந்து அனைவரும் அவருக்கு மரியாதை அளித்தனர். அவர் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி நாங்கள் உரையாடுவோம்.
நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு மருத்துவர் ரவிச்சந்திரன் தான் காரணம். அவரை மருத்துவர் என்று சொல்ல மாட்டேன், எனது நெருங்கிய நண்பர் என்று தான் சொல்வேன். நான் அரசியலுக்கு வரலாம் என நினைத்த போது கொரோனா வந்துவிட்டது. சிறுநீரக பாதிப்பு இருப்பதால் யாரையும் சந்திக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறினார்கள். அத்துடன் கொரோனா 2வது அலையும் வந்தது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டதால் பின்வாங்க முடியாது என்று நான் மருத்துவர்கள் கூறினேன். அவர்கள் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் சில விஷயங்களை தெரிவித்தனர். கொரோனா 2வது அலை துவங்கி விட்ட நிலையில் மக்களை சந்திக்கவோ, பிரசாரம் செய்யவோ கூடாது என்றார்கள். இத்தகைய சூழலில் நான் என்ன செய்ய முடியும்? இதை வெளியில் சொன்னால் அரசியலுக்கு வர பயந்துவிட்டேன் என்பார்கள் என மருத்துவர்களிடம் சொன்னபோது எந்த ஊடகம், ரசிகர்களாக இருந்தாலும் அவர்களிடம் நான் உங்கள் உடல் நலம் குறித்து நான் வந்து விளக்குகிறேன் என்றார். இதனை சொல்ல பயம் தேவையில்லை. அதன் பிறகே நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன்.
நிறைய சரக்கு போட்டால், ஓ… உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன். நிறைய மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கும். நிறைய ‘தம்’ அடித்தால் நுரையீரல் பாதிக்கும். நிறைய துரித உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிட்டால் இதயம் பாதிக்கும். ஆனால் உப்பு அப்படி அல்ல. உப்பு ‘ஜாஸ்தி’ ஆச்சு என்றால், உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் பாதிக்கப்படும். உப்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. உப்பு கம்மி பண்ணினாலும் தப்பு தான். ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். ஒரு திருமணத்துக்கு எனது மனைவி லதா சென்றார். திருமண விருந்தில் உணவு சூப்பராக இருந்திருக்கிறது. உடனே சமையல்காரர் பற்றி விசாரித்திருக்கிறார். நாராயணன் என்பவரை அனைவரும் சொல்லியிருக்கிறார். அந்த சமயம் எனது வீட்டு சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை. உடனே அந்த நாராயணன் என்பவரிடம் சென்று, ‘எங்க வீட்டுக்கு சமையல்காரராக வரீங்களா?’ என்று லதா கேட்டிருக்கிறார். ‘கரும்பு சாப்பிட கூலியா…’, என்ற ரீதியில் அவரும் வந்துவிட்டார். சூப்பராக சமைத்தார். செம டேஸ்ட். அந்த மாதிரியான சுவையை நான் அனுபவித்ததே இல்லை. நாங்களும் நன்றாக சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம். அதேவேளை எனக்கும், என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் (பி.பி.) ஏறிக்கிட்டே இருந்தது. டாக்டர்களிடம் சென்றோம். சிகிச்சையும் எடுத்தோம். ஆனாலும் ரத்தம் அழுத்தம் குறைந்தபாடில்லை, எகிறிக்கொண்டே இருந்தது. ஒருமுறை நண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார். ‘சாப்பாடு எப்படி இருக்கிறது?’ என்று சும்மா கேட்டேன். உடனே அவரும், ‘என்னடா சாப்பாட்டில் இவ்வளவோ உப்பு இருக்கு… இவ்ளோ ஆயில் இருக்கு… எப்படிடா சாப்பிடுறீங்க…’ என்று கோபத்தை கொட்டிவிட்டார். ‘அய்யோ, வருடம் முழுவதும் இதைத்தானே சாப்பிடுகிறோம்’, என்று அதிர்ந்து, உடனே அனைத்தையும் மாற்றினேன். அதன்பிறகே பி.பி. குறைந்தது. அதுமாதிரி நீங்களும் கவனமாக இருங்க. உப்பு அதிகம் சாப்பிட, அதுவே பழகிவிடும். புதிதாக யாராவது சொன்னால்தான் தெரியவரும்.
ஒரு சொட்டு ரத்தத்தை கூட நாம் உருவாக்க முடியாது என தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. எண்ணம் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் பேசிய வெங்கையா நாயுடு, “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று எனக்கு தெரிந்த பிறகு எனது நண்பர் குருமூர்த்தியிடம் அரசியலுக்கு ரஜினி வர வேண்டாம் என்று சொல்ல சொன்னேன். ரஜினிக்கு அரசியல் நல்லது இல்லை என்று நான் என்னுடைய அனுபவத்தை வைத்து சொன்னேன். அரசியல் அரோக்கியமானது கிடையாது. இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.