முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது!

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு, நாட்டு’ பாடலுக்கும், முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்துக்கும் கிடைத்துள்ளது.

திரைப்பட கலைஞர்களுக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் உலகின் சிறந்த அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார்தான் அவர்களது இலக்காக இருக்கும். மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆஸ்கார் விருது வழங்கும் விழா 2009-ம் ஆண்டில் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றார். ‘சவுண்ட் மிக்சிங்’ பணிக்காக ரசூல் பூக்குட்டி விருது பெற்றார். இந்த நிலையில் 95-வது ஆண்டாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் டால்பி தியேட்டரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்க டெலிவிஷன் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். உலகின் சிறந்த படங்கள், நடிகர், நடிகை உள்ளிட்டோருக்கு விருதுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது அறிவிக்கும் நேரம் வந்தது. இதில் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு.. நாட்டு..’ பாடல் மற்றும் ‘அப்லாஸ்..’, ‘திஸ் இஸ் லைப்..’, ‘லிப்ட் மி அப்..’, ‘ஹோல்ட் மை ஹேண்ட்..’ ஆகிய பாடல்கள் போட்டியிட்டன. நாட்டு நாட்டு பாடலுக்கு கண்டிப்பாக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இந்த பாடல் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததாலும், ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. இறுதியில் ‘நாட்டு.. நாட்டு..’ பாடலுக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடைக்கு சென்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுக்கொண்டனர். அப்போது, ‘ஒட்டுமொத்த ‘ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.

கீரவாணி பேசுகையில், ‘ஆஸ்கார் விருது வென்ற இந்த நேரத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். நான், ராஜமவுலி, எங்கள் குடும்பம் என எல்லோருக்கும் ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. அது ஆஸ்கார் விருது. இந்த வெற்றி என்னை இந்த உலகின் உச்சியில் நிறுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார். விழாவில் அவர் பாடல் போல ராகத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது. விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி, அந்த படத்தில் நடித்துள்ள ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. இந்த படத்தை டைரக்டு செய்த மும்பையை சேர்ந்த பெண் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வெஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டனர். தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பிள்ளைகள் போல பாவித்து வளர்க்கும் பாகன் தம்பதியை பற்றிய கதை இது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் நடந்துள்ளது. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்ட கார்த்திகி கொன்சால்வெஸ் பேசும்போது, ‘இந்த ஆஸ்கார் விருதை என் தாய்நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் குனீத் மோங்கா பேசும்போது, ‘இயற்கையுடன் ஒன்றச்செய்யும் படைப்புக்கும், ஜீவராசிகளின் வலிகளை புரிந்த கண்களுக்கும், இந்த படத்தை சிறந்த படமாக தேர்வு செய்தமைக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டார்.

ஆஸ்கார் விருதுக்காக சென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை 1969-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் ‘தெய்வமகன்’ படம் பெற்றது. அதன் பின்னர் பல படங்கள் சென்றது. கடைசியாக ‘ஜெய்பீம்’ படம் சென்றது. ஆனால் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. ஆஸ்கார் விருதைப்பெற்ற முதல் இந்தியர், முதல் பெண்மணி என்கிற இரண்டு பெருமையையும் ‘காந்தி’ படத்துக்காக பானு அத்தையா (ஆடை வடிவமைப்பு) பெற்றார். அதற்கு அடுத்து வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பிரபல வங்காள மொழி இயக்குனர் சத்யஜித்ரேவுக்கு 1992-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அனிமேஷன் படத்திற்காக 2016-ம் ஆண்டு ராகுல் தக்கார் ஆஸ்கார் விருது பெற்றார். ‘ஏமி’ படத்துக்காக 2016-ம் ஆண்டு ஆசிப் கபாடியா (பெஸ்ட் டாக்குமெண்ட்ரி) ஆஸ்கார் விருதை வென்றார். கேமரா சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு ரிகாஷ் சத்யே (தொழில்நுட்பம்) விருது பெற்றார். அந்தவகையில் மீண்டும் ஆஸ்கார் விருதை இந்திய படங்கள் பெற்றதை, ஒட்டுமொத்த இந்திய மக்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். விருது பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

யானை ரகு மற்றும் ஒரு தம்பதி பற்றிய கதை தான் இந்த The Elephant whisperers. அந்த தம்பதி வேறும் யாரும் இல்லை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருக்கம் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமில் வேலை செய்யும் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரின் மனைவி பெள்ளி தான். தாயை பிரிந்து சுற்றித் திரியும் யானைகளை பராமரித்து வருகிறார்கள். படத்தில் வந்த யானை ரகுவின் கதை இது தான்.

கடந்த 2017ம் ஆண்டு தாயை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காயங்களுடன் அலைந்த ஆண் யானைக் குட்டி தான் அந்த ரகு. தேனிக்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் ரகுவின் தாய் இறந்துவிட்டது. இதையடுத்து ஊருக்குள் புகுந்த ரகுவை நாய்கள் கடித்ததில் காயம் அடைந்தது. 3 மாதமே ஆன ரகு பிழைக்காது என்று கூறிவிட்டார்கள். ஆனால் பொம்மனும், பெள்ளியும் தேனிக்கனிக்கோட்டைக்கே சென்று அங்கு 15 நாட்கள் தங்கி ரகுவுக்கு சிகிச்சை, உணவு அளித்து குழந்தையை பார்ப்பது போன்று கவனித்திருக்கிறார்கள். அவர்களின் கவனிப்பால் குணமடைந்தது ரகு. அதன் பிறகே முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

பொம்மனும், பெள்ளியும் தான் அந்த யானைக்கு ரகு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்பொழுது தான் கார்த்திகி அங்கு சென்று பொம்மன், பெள்ளி, ரகு கதையை இரண்டு ஆண்டுகளாக ஷூட் செய்திருக்கிறார். ரகுவுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வைத்திருக்கிறார்கள். பாட்டிலில் பால் கொடுத்திருக்கிறார்கள். பெள்ளியை தன் சொந்த தாயாக நினைத்திருக்கிறது ரகு. அதுவும் பெள்ளி தான் பாட்டிலில் பால் கொடுக்க வேண்டுமாம். இல்லை என்றால் ரகு குடிக்காதாம். தாயின் அருகில் படுப்பது போன்று பெள்ளியின் அருகில் படுத்து தூங்குமாம் ரகு. பெள்ளிக்கு தெரியாமல் அவர் சாப்பாட்டை திருடி சாப்பிட்டு எஸ்கேப் ஆவது, அவர் மீது தும்பிக்கையை போட்டு தூங்குவது என செம சேட்டைக்காரனாம் ரகு. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ரகுவை வேறு ஒரு பாகனிடம் கொடுத்துவிட்டார்களாம்.