95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது. இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக – நாட்டு நாட்டு – கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.