நடிகை டாப்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. இவர் இந்திய அளவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் டாப்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாலிவுட்டில் ‘பிங்க்’ படத்தின் மூலம் அங்கு பிரபலமானார் டாப்சி. இந்தப்படம் தமிழில் அஜித்குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவரின் கைவசம் பல படங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடை அலங்கார நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டாப்சி கவர்ச்சி உடையில் கழுத்தில் நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். அந்த ஆபரணத்தில் மகாலட்சுமி மற்றும் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து கவர்ச்சி உடையில் எப்படி கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை அணியலாம் என வலதுசாரிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் இந்து கடவுளையும் அவமதிப்பதாகவும், மத உணர்வாளர்களை புண்படுத்துவதாகவும் சர்ச்சைகள் கிளம்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சாந்த ரக்ஷக் சங்கதன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பாஜக எம் எல் ஏ மாலினி கவுரின் மகனுமான ஏகலைவா சிங் கவுர் டாப்சி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.