மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல், சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் இது பொற்காலம். அதனை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நல்ல படங்களை கொடுப்பது எங்களின் கடமை ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு நழுவி போய்விட்டது. கல்கியை பார்த்து எழுத்தாளர்கள் பொறாமைப்பட்டது போல, மணிரத்னத்தை பார்த்து எழுத்தாளர்களும், இயக்குனர்களும் பொறாமைப்பட்டு வருகிறார்கள். அதில் நானும் ஒருவன். கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். பொறாமை தேவையில்லை. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க தைரியம் வேண்டும். அது மணிரத்னத்துக்கு இருந்தது. பணத்தை செலவு செய்யும் தைரியம் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு இருந்தது. அதனால்தான் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. நடிகர்-நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் இது பொற்காலம். அதனை போற்றி பாதுகாக்க வேண்டும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் இரட்டிப்பு வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.