ரூ.2000 செல்லாது: பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்: விஜய் ஆண்டனி!

2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் அடுத்த சில மாதங்கள் கடுமையாக நெருக்கடிக்கு மக்கள் ஆளாகினர். அப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசைகளில் நின்றனர். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் வெளியான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க பணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற வசனம் வரும். அப்போதே இந்த காட்சியையும், மோடியின் அறிவிப்பையும் சுட்டிக்காட்டி பலரும் கருத்திட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வங்கிகள் தொடங்கி வணிக நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் குறைந்தது. ஏடிஎம்களில் கூட புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வந்தன. இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுவிட்டதாக கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. ரூ.2000 நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக அறிவித்ததுடன் அந்த சுழற்சியையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான வெள்ளிக்கிழமை அன்றுதான் விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 ஆம் பாகம் திரைப்படம் வெளியானது. எனவே இதை வைத்து மீம்ஸ்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கிற்கு வந்த விஜய் ஆண்டனியிடம் ரூ.2000 நோட்டு செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள்தான் வறுத்தப்படுவார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.