வட சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கிவிட்டார் என்று வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
வட சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டர் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது மூடப்பட்டது. இந்நிலையில் அந்த தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியிருக்கிறார்கள் என தகவல் வெளியானது. அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் கட்ட திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அது குறித்து தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அகஸ்தியா தியேட்டர் அமைந்திருக்கிறது. அதனால் இதை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கியிருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது.
நயன்தாரா பற்றி வதந்திகள் பரவுவது வழக்கமாகிவிட்டது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தியேட்டர் விஷயத்தில் வதந்தி பரவியிருக்கிறது. தியேட்டர் குறித்த தகவல் வெளியானதுமே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தார். அந்த தகவலில் தற்போதைக்கு எந்த உண்மையும் இல்லை என்றார். இந்நிலையில் தியேட்டரை நயன்தாராவுக்கு விற்கவில்லை என அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.