இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று: கமல்ஹாசன்!

ஒடிசா மாநிலம் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:-

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.