10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் சந்தித்து பாராட்டுகிறார்.
நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வருவோர் இந்தியா மட்டும் அல்ல உலகளவிலும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வரும் போது திரைத் துறையை போன்று ஜொலிக்கிறார்களா என்பதுதான் விஷயமே. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் என நிறைய உதாரணங்கள் உள்ளன. இவர்கள் திரைத்துறையை போல் அரசியலிலும் பிரகாசமாக விளங்கினர். மாநில முதல்வர்களாக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசனும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கட்சி இன்னும் ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் வெல்லாவிட்டாலும் கமலுக்கென ஒரு வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது. அது போல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கே அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது கொடியையும் பெயரையும் விஜய் மக்கள் மன்றத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் தெரிவித்திருந்தார். இதனால் அந்த தேர்தல்களில் நிறைய பேர் வென்றனர். அவர்களை நேரில் அழைத்து விஜய் பாராட்டினார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின் போது தொகுதிவாரியாக அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதை வைத்தே விஜய் அம்பேத்கரை முன்னிறுத்தி அரசியலுக்கு வர பார்க்கிறார் என பேசப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அன்றைய தினம் 234 தொகுதிகளுக்கும் மதிய உணவு வழங்குமாறு தனது இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார். அது போல் அவர்களும் செய்தனர். அது போல் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பலரும் பாராட்டினர். அந்தந்த பள்ளி நிர்வாகம் அவர்களை அழைத்து பாராட்டியது. இதை போல் 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை விஜய் சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் வரும் ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். அதிலும் 234 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக சிறப்பிடம் பெற்றவர்களை நடிகர் விஜய் அழைத்து பாராட்டி ஊக்கத் தொகையும் சான்றிதழையும் வழங்குகிறார். இதற்கான அறிவிப்பை விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.