பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் தைரியமாக பேச வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை நாம் நிறுத்த வேண்டும் என ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இந்நிலையில் ப்ரியா பவானிசங்கரும் அது குறித்து பேசியிருக்கிறார். பாலியல் தொல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ப்ரியா பவானிசங்கர் மேலும் கூறியிருப்பதாவது, பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் தைரியமாக பேச வேண்டும். அதை விட முக்கியமானது அவர்கள் சொல்வதை நம் சமூகம் கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை, ஏன் இப்போ சொல்கிறாய் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்.
பாலியல் தொல்லை பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார், எது மாதிரியான வேலை செய்கிறார் என்கிற பாகுபாடு இல்லாமல் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார். பாதிக்கப்பட்டது குறித்து பெண்கள் பேசினால் நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், ஆதரவு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என ப்ரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.