திருமணம் செய்வதற்கு சில பொறுப்புகள் தேவை: தமன்னா

திருமணம் செய்வதற்கு சில பொறுப்புகள் தேவை. அதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தமன்னா பேசியிருக்கிறார்.

கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதலில் தமிழில்தான் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். விஜய், அஜித், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கினார். அதன் பிறகு தெலுங்குக்கு சென்ற அவர் அங்கும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து லீடிங் ஹீரோயினாக மாறினார். நிச்சயம் தமிழையும், தெலுங்கையும் பல வருடங்கள் தமன்னா ரூல் செய்வார் என பலர் கூறிய சூழலில் திடீரென அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. இதன் காரணமாக சில காலமாக தமிழில் தலை காட்டாமல் இருந்தார் தமன்னா. தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். இதற்கிடையே கார்த்தியுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். இப்படிப்பட்ட சூழலில் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. பாலிவுட்டுக்கு சென்ற அவர் ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இப்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜியில் நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் கதையில் ஜோடியாக விஜய் வர்மா நடித்திருக்கிறார். ஜூன் 29ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இது தவிர தமன்னா நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. அதில் ஓவர் க்ளாமராக நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரி2வில் நடித்தபோது விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோதுதான் எனக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. நான் எதிர்பார்த்த நபர் போலவே அவர் இருந்தார். உடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை’ என கூறி தனது காதலை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் காதலை உறுதிப்படுத்திய பிறகு திருமணம் குறித்து பேசியிருக்கிறார் தமன்னா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பத்து வருடங்கள் நடித்தால் போதும் என்ற மனநிலையில்தான் நான் நடிக்க வந்த புதிதில் இருந்தேன். 30 வயதில் திருமணம் ஆகி குழந்தை இருக்கும் எனவும் நினைத்தேன். ஆனால் இப்போதோ 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். திருமணம் செய்வதற்கு சில பொறுப்புகள் தேவை. அதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதனால் திருமணத்திற்கு தயாராக இருக்கிறேன் என எப்போது நான் உணர்கிறேனோ அப்போது திருமணத்தை செய்துகொள்வேன்” என்றார்.