‛மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் ‛தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்நிலையில் தான் சாதி மோதலை இயக்குனர் மாரி தூண்டுகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேல், பகத் பாசில் உள்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடத்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வடிவேல் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன.
மாரி செல்வராஜ் பேசுகையில், ‛‛மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் தான். ‛தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. இன்று ‘தேவர் மகன்’ என்பது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். அனைத்து இயக்குனர்களும் தேவர்மகன் படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான் படம் எடுக்கிறேன். ஆனாலும் ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’. வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்’ என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜின் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ‛தேவர் மகன்’ குறித்த மாரி செல்வராஜுன் இந்த கருத்து பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது போலீசில் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பவானி வேல்முருகன் என்பவர் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ‛‛தேவர் மகன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் தவறாக பேசி வருகிறார். தமிழகம் அமைதி பூங்காக உள்ள நிலையில் சாதி மோதலை தூண்டும் விதமாக திரைப்படம் எடுத்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.