2011ஆம் ஆண்டு ‘ஏழாம் அறிவு’ படத்தை தயாரித்தபோது தனக்கு இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசிலுடன் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இப்படத்துக்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘மாமன்னன்’ குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:-
2010ஆம் ஆண்டு என்னிடம் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது ‘மாட்டேன்’ என்று சொன்னேன். ஆனால் அதன்பிறகு வந்து ‘நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஏன் நடித்தாய் என்று கேட்கக் கூடாது. சூழல்கள் மாறும். நாம் கடந்து வரும் பாதையில் சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் விஷயங்கள் என எல்லாமே நம் பார்வையை மாற்றக் கூடும். 2017ஆம் ஆண்டு என்னிடம் ‘அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டபோது ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்றேன். இப்போது எம்எல்ஏ ஆகி, அமைச்சராகவும் ஆகிவிட்டேன்.
அரசியல் புரிதலுக்காக ஒரு விஷயம் சொல்கிறேன். 2011ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஏழாம் அறிவு’ என்ற படத்தை தயாரித்தேன். அதில் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது இருந்த அரசியல் புரிதலில் நான் அதை கண்டுகொள்ளவில்லை. சினிமாதானே என்று இருந்துவிட்டேன். அந்த காட்சி எடுக்கப்பட்ட போது சூர்யாவுக்கு தெரியாது. அந்த சீனில் அவர் இல்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு படத்தைப் பார்த்த சூர்யா எனக்கு போன் செய்து அந்த வசனம் படத்தில் இடம்பெறக் கூடாது; அதை நீக்குங்கள் என்று என்னிடம் கூறினார். அவருக்கு அப்போது அந்த புரிதல் இருந்தது. ஆனால் நான் அவரிடம் “அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டேன். எனக்கு அது குறித்த புரிதல் அப்போது இல்லை. ஆனால் இப்போது அதை யோசிக்கும்போது நான் தயாரித்த படத்தில் அந்த வசனம் இருந்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.