மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வியாழக்கிழமை (பக்ரீத் பண்டிகை) வெளியாகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு மாரி செல்வராஜ்க்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் மாரி செல்வராஜ் பேசியதற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் எனில் அவரது மாமன்னன் திரைப்படத்திற்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேனியில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாமன்னன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை இயக்கி வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்து இருந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூலை 29ம் தேதி திரையில் வெளியாக உள்ளது இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிரானது ஆகும். இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.