நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நடிகர், நடிகைகள் மீது வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், நடிகர், நடிகைகள் மீது வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாகவும் இதற்காக ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனவே இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் நடித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் முன் முறையீடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் தனுஷிற்கு ரூ.20 கோடி முன்பணமாக தரப்பட்டதாக தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக கூறப்பட்டது.
இதையடுத்து நடிகைகள் மீதும் பகிரங்கமாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடிகை லட்சுமி ராய் மற்றும் அமலாபால் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னணி நடிகைகள் படப்பிடிப்பிற்கு வரும்போது பத்திற்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கின்றனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பள தொகையை வழங்கவேண்டியுள்ளது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்த காரணம் கொண்டும் சம்பளம் வழங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு அவர்களே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் பதிலளிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து முக்கிய நடிகைகள் புரொமோஷன்களில் பங்கேற்காததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகைகள் புரொமோஷன் நிகழ்ச்சிகள், டிரைலர் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும் அதற்கும் சேர்த்து தான் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் தகவல் தெரிவிப்பதாக நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.