நான் நடித்த திரைப்படங்களிலேயே மாமன்னன் திரைப்படம்தான் அதிக வசூல்: உதயநிதி!

நான் நடித்த திரைப்படங்களிலேயே மாமன்னன் திரைப்படம்தான் அதிகமாக வசூல் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம், மாமன்னன். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது உதயநிதி பேசியதாவது:-

இந்தப்படம் வெளியாகும் 10 நாட்களுக்கு முன்னதாக படத்திற்கு நாங்கள் செய்த விளம்பரத்தை விட பத்திரிகையாளர்கள் அதிகமாக விளம்பரம் செய்தார்கள். அதற்காக முதலில் நன்றி.

மாரி செல்வராஜ் இந்தக்கதையை சொன்ன முதல் நாளில் இருந்து இந்தப்படத்திற்காக நாங்கள் உண்மையாக உழைத்தோம். இந்தப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. என்னுடைய முதல்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படமும், என்னுடைய கடைசி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இதுதான் என்னுடைய கடைசி திரைப்படம் என்று நினைத்தேன். ஆனால் இல்லை.. 50 வது நாள் விழா கொண்டாட்டம் இருக்கிறது.

தமிழகத்தில் 510 திரையரங்குகளில்தான் இந்தப்படத்தை திரையிட்டோம். தற்போது மாமன்னன் திரைப்படம் 470 திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த வெற்றிக்கு என்னுடைய மாமன்னன் திரைப்படக்குழுதான் காரணம். படத்திற்கான ஷூட்டிங் செல்வதற்கு முன்னால் படத்தில் இருந்து ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டோம். அப்போதே ஓடிடி, இசை உரிமம் உள்ளிட்டவற்றை நாங்கள் விற்று விட்டோம். படத்தை அப்படி பார்த்து பார்த்து செதுக்கிய மாரி சாருக்கு நன்றி.

இப்போது வரை மாமன்னன் திரைப்படம் (9 நாட்களில்) ஒட்டுமொத்தமாக 52 கோடி வசூல் செய்து இருக்கிறது. நான் நடித்த திரைப்படங்களிலேயே மாமன்னன் திரைப்படம்தான் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் ஆகும். அடுத்த வாரம் 14ம் தேதி இந்தத்திரைப்படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.