அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்குகிறேன் என நடிகர் சூர்யா கூறினார்.
நடிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து அவர்களது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அகரம் எனும் அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஆண்டுதோறும் இங்கு படித்த ஏழை மாணவர்கள் மருத்துவர், பொறியாளர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட கனவுகளை அடைகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் லட்சியத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். அதில் பெரும்பாலும் சூர்யாவோ அல்லது கார்த்தியோ இவர்கள் படப்பிடிப்புகளுக்கு சென்றுவிட்டால் சிவக்குமாரோ கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு அகரம் அறக்கட்டளையில் விழா நடந்தது. சென்னை சாலிகிராமத்தில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அவர் மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அவர் பேசியதாவது:-
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என எனக்கு தெரியும். இது போன்ற கல்வித் உதவித்தொகை வழங்கும் நிகழ்வால்தான் வாழ்க்கை முழுமையடைகிறது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும். அதை நான் இப்போதுதான் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளேன். பிறரை பழிச் சொல்லுதல், பிறரை பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். ஜாதி மதங்களை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வீண் சொல், பழிச்சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழுநாளையும் வீணடிக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான கல்வியை அகரம் அறக்கட்டளை வழங்க முயற்சித்து வருகிறது. கல்வி மூலமாக வாழ்க்கையையும் வாழ்க்கை மூலமாக கல்வியையும் படியுங்கள். இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.