நாட்டையே உலுக்கியுள்ள மணிப்பூர் சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிப்பூர் கலவரம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய மக்களிடையும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ள கொடூரம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம். மன்னிக்க முடியாத பெருங்குற்றம். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், “மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பாஜக தலைமையிலான அரசுகள் மௌனம் காப்பதை கண்டிக்கிறேன். சமூக – பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி இந்துக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, குகி-சோ கிறிஸ்தவ பழங்குடியினருக்கும் மெய்தி இனத்தவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களாகத் கலவரங்கள் தொடர்கின்றன. குகி – சோ பழங்குடியினரின் தேவாலயங்களையும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் எரிப்பதன் மூலம் தாக்குதல்கள் வகுப்புவாத வடிவத்தை எடுத்து இருக்கின்றன.
பாஜக தலைமையிலான மத்திய மாநில அரசுகள் மற்றும் அதன் அமைப்புக்கள் இந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்தி உள்ளன. இந்த மௌனமும், உணர்வின்மையும் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வெட்கக்கேடான செயல். வன்முறையில் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் ராஜினாமா செய்யவுய்ம் நாங்கள் வலியுறுத்துகிறோம். மணிப்பூர் மக்களுக்கு எனது ஆதரவு.” என்று குறிப்பிட்டு உள்ளார்.