எல்.ஜி.எம். படத்தை பார்த்த தோனிக்கு இவானாவின் கேரக்டர் பிடிக்கவில்லையாம்!

எல்.ஜி.எம். படம் பார்த்த தோனி இவானாவிடம் எனக்கு உங்களின் கேரக்டர் பிடிக்கவில்லை என்று கூறினாராம்.

கிரிக்கெட் வீரர் தோனி தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் முதல் தமிழ் படம் எல்.ஜி.எம்(Lets Get Married). ஜூலை 28ம் தேதி அந்த படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். முன்னதாக படக்குழுவுடன் சேர்ந்து படம் பார்த்த தோனிக்கு இவானாவின் கேரக்டர் பிடிக்கவில்லையாம். திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் சேர்ந்து இருக்கக் கூடாது என தன் காதலர் ஹரிஷ் கல்யாணிடம் கூறுவார் இவானா. அம்மாவையும், மகனையும் பிரிக்கும் பெண்ணாக இருக்கிறாரே என்று தான் தோனிக்கு இவானா மீது கடுப்பாம். இடைவேளையின்போது இவானாவை பார்த்து இந்த படத்தில் உங்களின் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் தோனி. முழு படத்தையும் பார்த்த பிறகே தோனிக்கு இவானாவின் கதாபாத்திரம் பிடித்ததாம். அம்மா, மகனை படத்தில் பிரிக்கப் பார்த்ததற்கே தோனி இப்படி டென்ஷனாகிறாரே. நிஜத்தில் எவ்வளவோ நடக்கிறது. தல இன்னும் பச்சப்புள்ளையாவே இருக்கிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

லவ் டுடே படம் மூலம் இவானாவுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. எல்.ஜி.எம். படமும் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.