கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் உடனே எல்லாரும் துள்ளுறீங்க. தஞ்சாவூர்ல நடந்தா டெல்டா மாவட்டமே போச்சு-ன்னு சொல்றீங்க.. அப்போ கடலூரில் நடந்தா அது பிரச்சனையே இல்லையா. கடலூர் விவசாயம் பத்தி பேச மாட்டீங்களா? என்று பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நெய்வேலியில் அரசு நிறுவனமான என்எல்சி இயங்கி வரும் நிலையில், 2வது சுரங்க விரிவாக்க பணிகள் ஆரம்பமாகி உள்ளன. இதற்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்று காலை கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில், 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இது விவசாயிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது. இன்னும் 2 மாதத்தில், நெற்பயிர்கள் அறுவடை நடைபெற உள்ள நிலையில், இப்போது விளைநிலத்தை அழித்து வருவது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இயக்குனர் தங்கர்பச்சான் இந்த விவகாரம் தொடர்பாக, ஒரு வீடியோவை ஆவேசமாக பேசி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் இறங்கவில்லை. 24,000 ஏக்கர் மூன்று பருவங்களும் விளையக்கூடிய விளைநிலங்கள் அழித்தொழித்து மக்கள் வெளியேற்றப்படுவதை ஏன் எவருமே கண்டு கொள்ளவில்லை?
சிறு சிறு சிக்கல்களை எல்லாம் ஊதிப்பெருக்கி அரசியல் தொழில் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். என்எல்சி நிர்வாகம், மறுபடியும் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடிய வேலையை இன்றைக்கு தொடங்கியிருக்காங்க. அந்த நிலங்கள், உலகம் தோன்றிய காலங்களில் தொடங்கி மக்களுக்கு உணவு கொடுத்துக்கிட்டு இருக்கு. ஏற்கனவே பிடுங்கப்பட்ட நிலங்கள் போதாதுன்னு, மறுபடியும் இப்போ இந்த வேலையை ஆரம்பிச்சிருக்காங்க. இதை யாருமே கண்டுக்கவில்லை.. நாமெல்லாம் எதை எதையோ பேசிக்கிட்டு இருக்கோம்? எதை எதையோ பண்ணிக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் 100க்கும் மேற்பட்டவை இருக்கும். ஆனால் ஒரு சங்கம் கூட அங்கு போய் களத்தில் நிற்கவில்லை. அவர்கள் எல்லாம் டிவி விவாத மேடைகளிலும், டெல்லியில் போராட்டம் நடத்தியும் விளம்பரம் தேடிக் கொள்ளத்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் என்ன வேலை? விவசாய சங்கங்கள் எதுக்கு இருக்கு?
விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை வரும் போது விவசாயிகள் வர வேண்டும். அது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் உடனே எல்லாரும் துள்ளுறீங்க. தஞ்சாவூர்ல நடந்தா டெல்டா மாவட்டமே போச்சுன்னு சொல்றீங்க.. அப்போ கடலூரில் நடந்தா அது பிரச்சனையே இல்லையா. கடலூர் விவசாயம் பத்தி பேச மாட்டீங்களா? தமிழகம் மின்மிகை மாநிலமாக தானே இருக்கிறது. அப்புறம் என்ன தேவைக்காக நிலக்கரி எடுக்குறீங்க? ஒரே ஒரு கட்சி மட்டும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறது. அப்படின்னா, அந்தக் கட்சி மட்டுமா தேர்தல் களத்தில் நிற்கபோகுது? வெட்கமே இல்லாமல் அரசியல் கட்சிகள் எல்லாம் என்ன பண்ண போறீங்க? நாக்கை தொங்க போட்டுட்டு, ஓட்டு கேட்க மட்டும் அங்கு வருவீங்க.. அப்போ பாதிக்கப்படுகிற மக்கள் அதற்கான சரியான பாடத்தை கொடுப்பாங்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விளைநிலங்களில் கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தங்கர்பச்சான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.