சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.
ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது. தற்போது ‘கண்ணே கலைமானே’ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, “நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.