பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை: தங்கர் பச்சான்!

‘பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை’ என இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கமாக பேசியுள்ளார்.

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியதாவது:-

84 வயதில் பாரதிராஜாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இது ஒரு துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஒரு லட்சம் பேர் நிற்கிறார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் உண்டு. என்னிடம் ஒன்றுமேயில்லை. நான் எப்படி எதிர்கொள்ள முடியும். நான் கடந்து போய் தான் ஆகவேண்டும். இப்படியான துணிச்சலை நான் ஒவ்வொரு படத்திலும் எதிர்கொள்கிறேன். சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரை தேடி அலைந்து அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டியிருக்கிறது. அதை எடுத்து, விற்க படும் பாடு பெரிய கஷ்டம். மக்களை பார்க்க வைக்க வேண்டும். ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஒரு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. அழகி படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. மக்களிடம் போய் சேர்ந்தபிறகு தேடி வருகிறார்கள். மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு தடையாக இருப்பவர்களை இன்னும் உணராமல் இருக்கிறோம்.

ஒரு பெரிய நடிகர் நடிக்கும் படத்துக்கான வியாபாரம் உடனே நடந்து முடிந்துவிடுகிறது. மக்களும் அதை பார்க்க தயாராக உள்ளனர். இது என்ன மனநிலை. முழுவதும் வன்முறை இருக்கும் அந்தப் படத்தை குழந்தைகளுடன் சென்று பார்க்கிறோம். கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும்?. படத்தில் நடிப்பவர்களுக்கு இந்த அறிவு இருக்காதா? கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. நான் ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன். வந்து பாருங்கள் என கெஞ்சிக்கொண்டே இருக்க வேண்டுமா? 10 மசாலா சினிமாவை காட்டினால் ஒரு குழந்தை அழிந்தேவிடுவான். அதில் ஒன்றுமேயில்லை. தீபாவளி போன்ற விழாக்களின்போது எவ்வளவு மது விற்பனையாகிறது என செய்தி வெளியிடுவது போலத்தான் மசாலா படங்களுக்கான வசூலை வெளிப்படுத்துவதும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?. இவ்வாறு அவர் கூறினார்.