நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை: சித்தார்த்

“நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

‘சித்தா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த் கூறியதாவது:-

இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது. நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம்.

இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம்தான். உரையாடலில் புரிதல் பிறக்கும். மாற்றம் நமக்குள் வரவேண்டும் என்றால் குழந்தைகளுடன் பேச வேண்டும். நிறைய பேர் குழந்தைகளுடன் பேச முதல் 5 நாட்கள் படம் பார்த்தது சந்தோஷம். மணிரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்துக்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினியும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார்.

படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது. படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ‘அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணிரத்னம் பாராட்டினார். உனக்குதான் பாடல் மறக்கமுடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி.

99% படங்கள் ஆண்களுக்காகதான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை. மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார். ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி! இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகா சம்பவம் குறித்து பேசுகையில், “28-ம் தேதி பெங்களூரில் எந்த பந்தும் நடைபெறவில்லை. தனியார் ஆடிடோரியத்தில் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். பந்த் அன்று நான் என்னுடைய சுயநலத்துக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினேன் என வதந்தி பரப்புகின்றனர். அடுத்த நாள் தான் பந்த் நடைபெற்றது. எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. சித்தா படத்தை பற்றி பேசாமல் இது குறித்து பேசுவது வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத பெரிய மனிதர்கள் பலரும் பொதுத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி. சிவராஜ்குமார், பிரகாஷ்ராஜ்குமார் ஆதரவு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. நாம் எல்லோரும் ஒன்று தான். அதிலிருக்கும் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுபோல சம்பவம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்க கூடாது” என்றார்.