என்னை பற்றி ரஜினி ஆதரவாக பேசியிருந்தால் அவருக்கு நான் சல்யூட் அடித்திருப்பேன் என நடிகை ரோஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை ரோஜா தனது திரைப்பயணத்தில் சாதித்தது போல் அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார், அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அறியப்பட்டவர். ஆனால் அவர் இரு முறை தேர்தலில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார். சொந்த கட்சியினரே தனக்கு எதிராக பணியாற்றியதாக ஒரு குற்றச்சாட்டையும் ரோஜா எழுப்பியிருந்தார். எனினும் ரோஜா அந்த கட்சியில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டும் ஓரங்கட்டப்பட்டும் வந்த நிலையில் அவர் இனியும் இந்த கட்சியில் நீடிக்கக் கூடாது என முடிவு செய்தார். இதையடுத்து அங்கிருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு முதலில் 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகினார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஆளும் சந்திரபாபு நாயுடு அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். ரோஜாவின் பதிலடி விமர்சனங்களை பார்த்து ஜெகன் அண்ணாவே மிரண்டுவிட்டார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டும் ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எனினும் எடுத்த எடுப்பிலேயே ரோஜா அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த ஆண்டு சுற்றுலா துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் மோசடி வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை ரோஜா கொண்டாடினார். இதனால் ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி பண்டாரு சத்யநாராயணன் அவதூறு கருத்தை பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் நடிகை ரோஜா புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சந்திரபாபு நாயுடு கட்சியில் நான் இருக்கும் போது மோசமாக நடத்தினார்கள். அதனால்தான் நான் அந்த கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக தேர்வாகினேன். அப்போது சட்டத்திற்கு விரோதமாக சந்திரபாபு நாயுடு என்னை சஸ்பெண்ட் செய்தார். மகளிர் அணி மீட்டிங்கிற்காக எனக்கு அழைப்பு வந்தது., அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் செல்லும் போது என்னை கடத்திச் சென்றுவிட்டார்கள், விமான நிலையத்திலிருந்து வந்த என்னை வேறு ஒரு பாதைக்கு தவறாக அழைத்து சென்றுவிட்டனர். அப்போது எனக்கு உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். அப்படி ஆகியிருந்தால் அதற்கு காரணம் சந்திரபாபு நாயுடுதான். மாலை வரை காரில் வைத்தே சுற்றினார்கள். என்னை மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லவே இல்லை . இதுகுறித்து டிஜிபி மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளேன். என்னால் சந்திரபாபு நாயுடுவை அடிக்க முடியவில்லை. ஆனால் கடவுளாக பார்த்து அவருக்கு தண்டனை கொடுத்துள்ளார். அதனால் நான் என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.
நான் நடித்த ஃப்ளூ பிலிம் வீடியோ இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியிருந்தால் வெளியிட வேண்டியதுதானே. 10 ஆண்டுகளாக இதைத்தான் சொல்கிறார்கள். எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என்டிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு வந்து சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்தார் ரஜினிகாந்த். அத்துடன் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும் பேசியிருந்தார். ரஜினி மீது ஆந்திராவில் நல்ல மரியாதை உள்ளது. அதை புரிந்து கொண்டு அவர் பேசியிருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாகவும் அரசியலுக்கு வரேன் வரேன் என கூறிவந்தார். ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை. சினிமா வேறு, அரசியல் வேரு.. படம் நல்லா இருந்தாதான் ஓடும். கதை நல்லா இல்லை, தங்களுக்கு பிடித்தவர் நடிகர் என்பதற்காக எப்படி படம் ஓடும். விஜய் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே வெல்ல முடியும். சந்திரபாபு நாயுடு கட்சியினர் என்னை பற்றி பேசும் போது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும். அவருடன் இரு படத்தில் நடித்திருந்தேன். என்னை பற்றி அவருக்கு தெரியும். பெண்ணை பற்றி தவறாக பேசக் கூடாது என ரஜினி சார் சொல்லியிருந்தால் நான் அவருக்கு சல்யூட் அடித்திருப்பேன். இவ்வாறு ரோஜா கூறியுள்ளார்.