நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நோய் எதிர்ப்பு பூஸ்டரின் பயன்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார். யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நோய் எதிர்ப்பு பூஸ்டரின் பயன்களாவன- வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும், இதயத்துக்கான நலம் மேம்படும், தசைகள், எலும்புகளின் செயலை அதிகரிக்கும், வைரஸ் மற்றும் இதர நோய்களுக்கு எதிராக சண்டையிடும், இதயச் சதைகளின் அமைப்பினை மேம்படுத்தும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டால் மனம் தளர வேண்டியதில்லை. சிகிச்சை குறித்து தொடர்ந்து பதிவிடும் சமந்தாவின் செயலை பலரும் பாராட்டுகிறார்கள். இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.