இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி “ஜெய் ஸ்ரீ ராம்” என ரசிகர்கள் கோஷமிட்டது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக இயக்குநர் அமீர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. கடந்த 2011க்கு பிறகு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் நிலையில், இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த உலகக் கோப்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலிலும் டாப் இடத்திற்குச் சென்றது.
இருப்பினும், அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் அங்குப் போட்டியைக் காண வந்தோர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அங்குப் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி சில கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக டாஸ் வென்று பாபர் ஆசம் பேசத் தொடங்கிய போது. அவரை பேசவே விடாமல் அங்குள்ளவர்கள் கோஷமிட்டனர். அதேபோல பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் இதே தான். அவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். குறிப்பாகப் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டுத் திரும்பும் போது “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷத்தை எழுப்பியுள்ளனர். பாபர் ஆஸம், ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். விளையாட்டு தான் பொதுவாக அரசியல், மதம் என அனைத்தையும் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது அதே விளையாட்டுப் போட்டியில் இப்படி நடந்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இது தொடர்பாக இயக்குநர் அமீரும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் படித்த சமூகத்தை எப்படி மடை மாற்றியுள்ளனர் என்பதற்கான வெளிப்பாடு தான் இந்த கோஷம். ஏனென்றால் அங்கு நேரில் சென்று போட்டியைப் பார்த்த யாருமே படிக்காதவர்களோ.. கடை நிலை ஊழியர்களோ இல்லை. அங்கு இருந்த அனைவரும் மேல்தட்டு மக்கள் தான். அப்படிப்பட்ட மக்கள் மூளையில் என்ன புகுத்தப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடு தான் ராம் கோஷம். விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அது ஒரு கிரிக்கெட் வாரியம். அதேபோல பாகிஸ்தான் டீமும் பாகிஸ்தான் அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அதுவும் பாகிஸ்தான் வாரியத்துடையது. அந்தந்த நாட்டை சேர்ந்தவர்கள் விளையாடுவதால் பொதுவாக நாட்டின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்கள். எந்தவொரு நாடும் அந்த வீரர்களை உருவாக்கவில்லை. தனியார் நிறுவனங்களே அந்த அணிகளை உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க வர்த்தகம் தான். அப்படியொரு வர்த்தகத்தில் சென்று உங்கள் தேசப்பற்றைக் காட்டுவீர்கள் என்றால் உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றே சொல்ல வேண்டும். பிசிசிஐ அமைப்பில் அரசியல் இருக்கலாம். ஆனாலும், அது அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. இவ்வளவு பெரிய வர்த்தகம் சார்ந்த ஒன்று என்பதால் அரசு அதில் தலையிட்டுள்ளது அவ்வளவுதான். ஆனால், அது அரசு உருவாக்கியது இல்லை. அவை முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து இயங்குபவை மட்டுமே. இதையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டு உணர வேண்டும். அங்குச் சென்று தான் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.