நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார்: டி இமான்!

நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி. இமான் கூறியதை அடுத்து, இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையத்தில் மிகப்பெரிய புயல் கிளம்பி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த படத்தை தொடர்ந்து, அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் ஆரம்பகாலகட்டத்தில் மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா என பல ஹிட் படங்களில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு காரணமாக இருந்தவர் டி இமான் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு துணையாக நின்றவர் டி இமான், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், டி இமான் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் டி இமான் கூறியுள்ளதாவது:-

சிவகார்த்திகேயனுடன் இனி ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது முடியாது, அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில், நான் ஒரு வேளை இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் இருந்தால், வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம். மேலும், அந்த துரோகத்தை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். அதுவரை என்னிடம் அவர் அன்பாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் தான் அவர் எனக்கு செய்த துரோகம் தெரியவந்தது. எனக்கு எப்படி துரோகம் இழைக்க உனக்கு மனது வந்தது என்று சிவகார்த்திகேயனிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் இந்த இடத்தில் சொல்ல முடியாது, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதைமூடி மறைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார், குழந்தைகளின் எதிர்காலம், டி இமான் அண்மையில் மனைவியை விவாகரத்து செய்தது இவை அனைத்தையும் வைத்து, சிவகார்த்திகேயன் தான் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கட்டுக்கதை பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.