அயோத்தி ராமர் கோவில் சனாதன கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்படும் என்றும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தேஜஸ்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் தேவாலயம் இருப்பதைப் போல, இந்துக்களுக்கு அயோத்தி ராமர் கோவில் மிகப்பெரிய புனித தளமாக விளங்கும் என்று தெரிவித்தார்.
இந்த கோவிலை அமைப்பதற்காக பல நூறு ஆண்டுகளாக இந்து அமைப்பினர் போராடி வந்ததாக குறிப்பிட்ட அவர், அயோத்தி ராமர் கோவில் நமது நாட்டின் மிகப்பெரும் சின்னமாகவும், சனாதன கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.