செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கேரளா பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
பிரபல மலையாள நடிகரும், முன்னாள் பாஜ ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி நேற்று கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரின் தோள் மீது கை வைத்து அவர் அநாகரீகமாக நடந்து கொண்டார். இது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சுரேஷ் கோபி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அந்த பெண் நிருபர் கூறியுள்ளார்.
பெண் நிருபரிடம் மோசமாக நடந்து கொண்ட சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சுரேஷ் கோபியின் கையை அந்தப் பெண் நிருபர் தட்டிவிட்ட பின்னர் மீண்டும் அவர் மீது கை வைத்தது கடும் கண்டனத்திற்குரியது என்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் சுரேஷ் கோபி கூறியதாவது:-
நான் எந்த மோசமான எண்ணத்துடனும் பெண் நிருபரிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் செல்லும் வழிக்கு குறுக்கே அவர் நின்று கொண்டிருந்தார். பேட்டியை முடித்த பின்னர் நான் செல்ல முயற்சித்தபோது மீண்டும் மீண்டும் தேவையில்லாத கேள்விகளை அவர் கேட்டார். ஆனாலும் என்னுடைய மகளைப் போலவே கருதித் தான் அவரை தொட்டேன்.என்னுடைய செயல் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து அவரிடம் பேசுவதற்காக நான் பலமுறை போனில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.