நடிகைகளின் அந்தரங்க பாகங்கள ஜூம் பண்ணி பரப்புறாங்க: மிருணாள் தாகூர் கண்டனம்!

ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச வீடியோ வைரல் ஆனது குறித்து நடிகை மிருணாள் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் மிருணாள் தாகூர், “இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் நிச்சயமாக வெட்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு மனசாட்சி இல்லை என்பதை காட்டுகிறது. ராஷ்மிகா இதனை பொதுவெளியில் பேசியதற்காக நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பெண் நடிகர்களை ஆபாசமாக சித்தரித்து, அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, வீடியோக்களை எடிட் செய்து அதனை இணையத்தில் உலாவ விடுகிறார்கள். ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் நடிகைகளாக இருப்பதால் எங்கள் மீது அதிக வெளிச்சம் விழுகிறது. ஆனால் இறுதியில் நாங்களும் மனிதர்கள்தான். நாம் ஏன் இதை பற்றி பேச தயங்குகிறோம். அமைதியாக இருக்க வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக, முன்னணி நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா, விஜயின் வாரிசு, அமிதாப்பச்சனின் குட் பாய் உள்ளிட்ட பல படங்களில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் இவர் அரைகுறை ஆடையுடன், லிஃப்ட் ஒன்றிற்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது, அந்த வீடியோவில் உண்மையாக இருந்த பெண்ணின் முகமானது, செயற்கை தொழில்நுட்பத்தின் வாயிலாக ராஷ்மிகா மந்தனாவாக மாற்றப்பட்டு இருப்பது என்பது. இதனை பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் கண்டித்ததோடு, இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து பரபரப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தின் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறானவை பகிரப்பட்டால் 36 மணி நேரங்களில் அவை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும். ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.