ரூ 25 லட்சம் மோசடி புகாரில் நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் போலீஸார் விசாரணை!

வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ 25 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபுதேவாவின் தம்பி நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் நாகேந்திர பிரசாத் குஷி, கில்லி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ், நினைவிருக்கும் வரை, சாக்லேட், மின்னலே, தலைவி உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் விக்னேஷ். இவர் மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விக்னேஷ் திநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2021 ஆம் ஆண்டு வீடு வாடகைக்கு தேடிய போது நாகேந்திர பிரசாத்தின் வீட்டில் குறிப்பிட்டுள்ள நபருக்கு போன் செய்தார். அப்போது போனில் பேசிய நாகேந்திர பிரசாத்தின் மனைவி ஹேமா, வீட்டை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வாடகை விவரங்களை கேர் டேக்கரான STSK Proptech என்ற நிறுவனத்துடன் பேசுமாறு தெரிவித்தாராம். இதையடுத்து விக்னேஷுக்கு வீடு பிடித்துவிட்டது. இதனால் அந்த நிறுவனத்திடம் பேசினாராம். அதற்கு அவர் லீசுக்கு ரூ 25 லட்சம் கொடுத்தால் அதிலிருந்து வாடகையை மாதாமாதம் ஓனருக்கு அனுப்பிவிடுவோம். வீட்டை காலி செய்யும் போது ரூ 25 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார்களாம். இது குறித்து விக்னேஷ், நாகேந்திர பிரசாத்தின் மனைவியிடம் ஆலோசித்துள்ளார். அவரிம் எதற்காக தனியார் நிறுவனம், தான் மாத வாடகையை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுகிறேன் என தெரிவித்தாராம். ஆனால் ஹேமாவோ இல்லை தனியார் நிறுவனம் தங்களுக்கு நம்பகமான நிறுவனம், நிறைய செலிபிரட்டிகளின் வீடுகளை அவர்கள்தான் கேர்டேக்கராக பார்த்துக் கொள்கிறார்கள். எனவே தனியார் நிறுவனம்தான் தங்களுக்கு சரியாக இருக்கும் என்றாராம். இதை நம்பிய விக்னேஷ் முறைப்படி ஆவணங்களின் உதவியுடன் ரூ 25 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுத்தார்களாம். ஆனால் 8 மாதங்கள் கழித்து அவர்கள் வேலையை காட்டிவிட்டார்களாம்.

நீண்ட மாதமாக வாடகை கொடுக்காததால் அதுகுறித்து நாகேந்திர பிரசாத், விக்னேஷிடம் கேட்ட போது ரூ 25 லட்சம் விவகாரத்தை கூறியுள்ளார். ஆனால் நாகேந்திர பிரசாத்தோ அதெல்லாம் எனக்கு தெரியாது என்றாராம். இதையடுத்து இந்த மோசடி குறித்து விக்னேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாராம். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை விக்னேஷுக்கு நாகேந்திர பிரசாத் போன் செய்து ஒழுங்காக வீட்டை காலி செய்துவிடுங்கள், இல்லாவிட்டால் பிரச்சினையை சந்திப்பீர்கள் என மிரட்டினாராம். இந்த நிலையில் விக்னேஷ் , நான் கொடுத்த 25 லட்சத்தை கொடுத்துவிடுங்கள். கிளம்பிவிடுகிறேன் என்றாராம். மேலும் உங்கள் மனைவி சொன்னால்தான் தானே நாங்கள் தனியார் நிறுவனத்துடன் அக்ரிமென்ட் போட்டோம். இப்போது தெரியாது என்றால் என்ன அர்த்தம் என விக்னேஷ் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வர விக்னேஷும் அவருடைய மனைவியும் சென்றனராம். அப்போது வீட்டுக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்ததாம். அவர்கள் வீட்டின் பூட்டை திறக்க முடியாதபடி இரும்பு தகடை வைத்து வெல்டிங் செய்யப்பட்டிருந்ததாம். இதுகுறித்து நாகேந்திர பிரசாத்திடம் கேட்ட போது வாடகை கொடுத்தால்தான் திறப்பேன் என்றாராம். உடனே விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் வீட்டுக்குள் விக்னேஷ் வளர்க்கும் செல்ல பிராணி இருப்பதால் அதற்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தாராம். இதையடுத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அன்று நாகேந்திர பிரசாத்தை வரவழைத்து வீட்டின் தகடை நீக்கிவிட்டு பிறகு அந்த நாயை மீட்டனர். ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்த நாய், விக்னேஷை பார்த்ததும் மகிழ்ச்சியில் கொஞ்சி விளையாடியது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த கட்டப்பா சிவக்குமார், ஏற்கெனவே இது போல் நடிகர் டேனி, நடிகை பவித்ரா லட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் கூட வாடகைக்கு ஆள் அமர்த்துவதாக கூறி பல கோடியை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சிவக்குமார் மீது கடந்த மே மாதம் டேனி புகார் அளித்துள்ளாராம். அது போல் சிவக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகிறார்கள்.