ராஷ்மிகாவின் போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், இது முட்டாள்தனமானது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கிரிக் பார்ட்டி என்ற திரைப்படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் மூன்று படங்கள் கன்னடத்தி நடித்தாலும், தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் தான் ராஷ்மிகாவுக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதன்பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகா, தமிழ், இந்தியிலும் பிரபலமாகிவிட்டார். பான் இந்தியா நடிகையாக பிஸியாகிவிட்டாலும், இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டாவுடன் காதல், டேட்டிங் என ரவுசு காட்டி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி உடையில் இருக்கும் அந்த வீடியோவை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த ஆபாச வீடியோ எடிட் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானதோடு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் AI தொழில்நுட்பம் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த போலி வீடியோ குறித்து ராஷ்மிகா மந்தனா தனது வேதனையை பதிவு செய்திருந்தார். தான் ஒரு நடிகையாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் கவலையடைய செய்கிறது. இது ஒரு சாதாரண பெண்ணுக்கு நடந்திருந்தால் என்னவாகிருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறானவை என்றால் அவை 36 மணி நேரங்களில் நீக்க வேண்டும். மேலும், சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும். ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் ராஷ்மிகாவுக்கு ஆதாரவாக கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், போலி வீடியோ விவகாரம் அச்சத்தை தருகிறது. சமூக வலைத்தளங்களில் அன்பு, நேர்மறையான விஷயம், எச்சரிக்கை பதிவுகள், புதிய தகவல்கள் தான் பகிர வேண்டுமே தவிர, இதுபோன்ற முட்டாள்தனமான வீடியோக்களை அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் போலி வீடியோ சர்ச்சை திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரிய தலை வலியாக உருவெடுத்துள்ளது.