பணம் கொடுத்து பாசிட்டிவ் விமர்சனம் எழுதுறாங்க: வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். விடுதலை 2-வை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சினிமா விமர்சனம் குறித்து வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் வெற்றிமாறன். இந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால், வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மாரி செல்வராஜ், மடோன் அஸ்வின் ஆகியோர் ரவுண்ட் டேபிள் மீட்டிங்கில் பங்கேற்றனர். அப்போது பேசிய வெற்றிமாறன் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

சமீப காலங்களாக ஒரு படம் வெளியான சில மணி நேரங்களில், அதன் விமர்சனங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின்றன. ஒருவேளை நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகினால், அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்துவிடுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் நெகட்டிவான ட்ரோல்களால் சில படங்கள் தோல்வியடைந்தன. அதேநேரம் தங்களது படம் வெளியாகும் போது, சோஷியல் மீடியா ட்ராக்கர்களுக்கு தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்து பாசிட்டிவான விமர்சனம் எழுத வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ள வெற்றிமாறன், சோஷியல் மீடியாக்களில் வெளியாகும் விமர்சனங்களால் புதிய படங்களுக்கு பாதிப்பு இல்லை என கூறியுள்ளார். மேலும், ஒரு படம் வெளியாகும் போது நேரடியாக ஹீரோ, தயாரிப்பாளர் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதால், சோஷியல் மீடியா ட்ராக்கர்களுக்கு பணம் கொடுத்து விமர்சனம் எழுத சொல்லப்படுவதாக கூறியுள்ளார். ஒருவேளை படம் நல்லா இல்லை என்றால், அவர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கப்படுவதாகவும் வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.