நடிகை மாதுரி தீட்சித்துக்கு இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது உலகளவில் நடத்தப்படும் 14 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டுக்கான 54வது சர்வதேச திரைப்பட விழா நேற்று கோவாவில் பிரமாண்டமாக தொடங்கியது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 இடங்களில் மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த பிரமாண்ட விழாவில், 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும், அதில் 89 இந்திய திரைப்படங்கள், 62 ஆசிய திரைப்படங்கள், 10 சர்வதேச திரைப்படங்கள், 13 உலக திரைப்படங்கள் திரையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த 54வது சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ‘இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம்’ என்ற சிறப்பு விருது பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்துக்கு வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் தொடர்ந்து தனது பங்களிப்பை நடிகை மாதுரி தீட்சித் வழங்கி வருகிறார். அவரை கவுரவிக்கும் விதமாக ‘இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்’ என்ற சிறப்பு விருதை மத்திய மந்திரிகள் அனுராக் தாகூர், எல். முருகன் வழங்கி பாராட்டினர்.