பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ்: அமலாக்கத்துறை சம்மன்!

தங்க நகை சேமிப்பு திட்டமான பொன்சி திட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று ரூ.100 கோடி வரை மோசடி செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிரணவ் ஜுவல்லர்ஸ். மேலும், பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜூவல்லர்ஸ். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜூவல்லர்ஸ் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர். பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது. நிறைய பேர் நகை எடுக்க கூடினர். பழைய நகைகளை கொடுத்து டெபாசிட் செய்தனர்

ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை வாங்கிச்செல்ல முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். ஆனால், பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை, தங்கள் கிளைகளை அடுத்தடுத்து இழுத்து மூடியது. திருச்சியில் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையும் மூடப்பட்டது. மதுரை, திருச்சி என பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது மோசடி புகார் அளித்துள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் 11க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன் மற்றும் கிருத்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. இதைத்தொடர்ந்து, பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்பான இடங்களில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சியில் பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத சுமார் 23.70 லட்சம் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர் பினாமிகள் எனவும், அந்நிறுவனத்திற்கு ரூ100 கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவியதாகவும் ஒப்புக்கொண்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.

இதனிடையே 100 கோடி பொன்சி திட்ட முறைகேடு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் தொடங்கும் போது தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமான அளவில் விளம்பரம் செய்யப்பட்டது அந்த விளம்பரத்தில் நடித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 0 சதவிகிதம் செய்கூலி, 0 சதவிகிதம் சேதாரம் என விளம்பரம் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.