என்னை பற்றியும் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றியும் பேசுவதற்கு குஷ்புவுக்கு தகுதியே இல்லை என பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேளச்சேரி, செம்மஞ்சேரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் குறிவைத்து விட்டீர்கள். சேரியிலும் தமிழ் மட்டுமே பேசுவார்கள், தமிழின் பாரம்பரியம். இப்போது தமிழ் மொழியையே இழிவுபடுத்தி விட்டீர்கள். செரி (தொழிலாளர்கள்), மீனவர்கள், விவசாயிகள், காவல்துறை/ ராணுவம் தமிழகத்தின் இந்தியாவின் 4 தூண்கள். அவர்கள் இல்லாமல் நம் நாடும் நம் அரசும் இயங்காது. ஹிந்தி, பிரஞ்சு, ஆங்கிலம், இதை விட தமிழ் மொழி குறைவாக இல்லை. தமிழ் பழமையான மொழி, மதிக்கப்படும் மொழி. உங்கள் ஈகோ அதிகமாகிவிட்டது. அது பாஜக நிலைப்பாடாக இருக்கலாம். பிஜேபி இந்தி மற்றும் இப்போது பிரஞ்சு போன்றவற்றை ஊக்குவிக்கிறது. சமூக நீதி, சமத்துவம் நம் அனைவருக்கும் தேவை. இத்தகைய பேச்சு வேறுபாடுகளையும் வெறுப்பையும் மட்டுமே கொண்டு வரும். இதை நான் கண்டிக்கிறேன்.
உங்கள் அன்பான தகவலுக்கு குஷ்பு, என் புகாரை NCW ஏற்கவில்லை. அது எடுக்கப்படவில்லை. அண்ணாமலையை காப்பாற்ற கண் துடைப்பு, அவர்களிடம் நேரடியாகப் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் பதிலளிக்கவில்லை. இரண்டாவதாக நான் பாஜக தலைவர்களிடம் பல்வேறு புகார்களை அளித்தேன். நடவடிக்கை இல்லை விசாரணை இல்லை. நான் பிஜேபி கட்சியில் இருந்தபோதும் உங்கள் NCW பதவியை பெறுவதில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக இருந்தீர்கள். த்ரிஷாவுக்கு நீங்கள் காட்டிய ஆர்வத்தை என்னுடைய – அண்ணாமலை, திருச்சி சூரியா, அமர் பிரசாத், செல்வகுமார் பிரச்சினையில் காட்டவில்லை. suo moto எடுக்கப்படவில்லை. நீங்கள் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை. என்னைப் பற்றியும் பிற பாதிக்கப்படக் கூடிய பெண்களைப் பற்றியும் பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. இப்போது புகார் கொடுக்கிறேன். அண்ணாமலை, அமர்பிரசாத் ரெட்டி, செல்வகுமார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுப்பீர்களா? இவ்வாறு காயத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக சேரி மொழி குறித்த சர்ச்சையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், நான் சேரி மொழி என கூறியது பிரெஞ்ச் மொழி அர்த்தத்தில்தான். நான் யாரையும் தவறாக கூறவில்லை. வேளச்சேரி என இருப்பதற்கு என்ன அர்த்தம். சேரி என்றால் என்ன என விளக்குங்கள். வேளச்சேரி, செம்மஞ்சேரி என அரசு பதிவேடுகளிலேயே இருக்கிறதே! மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என யார் சொன்னது. அந்த வீடியோ மே மாதம் வந்த போது மீடியா எப்படி பொங்கியதோ அதே போல் நானும் பொங்கினேன். தேசிய மகளிர் ஆணையம் என்பது காவல் துறை அல்ல, யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். தாமாக முன் வந்து எடுக்க மாட்டார்கள். காயத்ரி ரகுராம் விவகாரத்திலும் அவர் வந்து புகார் அளிக்கவில்லை. அமைச்சர் ரோஜா தன் மீது தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் அவதூறு பரப்பியதாக புகார் அளித்தார், அதனால் நடவடிக்கை எடுத்தோம் என்றார்.