அந்த விஷயத்தில், ஆலியா பட் செய்ததையே பின்பற்றலாம்: சுஹானா கான்!

பாலிவுட் நடிகையும் நடிகர் ஷாருக்கானின் மகளுமான சுஹானா கான் இப்போது அவரது அறிமுகப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது முதல் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, ஆலியா பட் குறித்து அவர் பேசிய விஷயம் வைரலாகியுள்ளது. அந்த விஷயத்தில் ஆலியா பட் பின்பற்றியதை நாமும் பின்பற்றவேண்டும் என அவர் கூறியது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

ஹிந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் எனும் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கானுக்கு ஆரியன் கான் எனும் மகனும் சுஹானா கான் என்ற மகளும் இருக்கிறார்கள். ஆரியன் கான் கூடிய விரைவில் இயக்குனராக அவரது முதல் படத்தை இயக்கவிருக்கிறார், அதேபோல சுஹானா கான் இப்போது அவரது முதல் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாலிவுட் வாரிசு நடிகையான சுஹானா கான் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார். பாலிவுட் இயக்குனரான சோயா ஆக்தர் இயக்கத்தில் சுஹானா கான், வேதங் ரெய்னா, குஷி கபூர், அகஸ்தியர் நந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தி அர்சீஸ். வாரிசு நடிகர்களான குஷி கபூர் மற்றும் சுஹானா கான் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு பாலிவுட் வட்டாரத்தில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. டீன் மியூசிக்கல் காமெடி படமாக தி ஆர்சீஸ் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுடில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஆலியா பட் அவரது திருமண உடையை தேசிய விருது வாங்கும் பொழுது அணிந்திருப்பது குறித்த கேள்வி சுஹானா கானிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுஹானா ஆலியா செய்திருக்கும் இந்த விஷயம் மிகவும் பெரிய விஷயம் என்றும், சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் ஆலியா பட் ஏற்கனவே அணிந்திருந்த உடையை மீண்டும் அணியும்போது நாமும் அதனை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணிய முற்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் புதிய உடைகளை தயாரிக்கும் போது சமூகத்தில் எக்கச்சக்கமான கழிவுகள் வெளியேற்றப்படும். ஆலியா பட் செய்த அந்த விஷயம் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது என சுஹானா கான் கூறியிருக்கிறார்.

நடிகை ஆலியா பட் கடந்த 2022ஆம் ஆண்டு அவருடன் இணைந்து நடித்த ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும் ஆலியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான கங்குபாய் கத்தியவாடி என்னும் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார். இந்த விருதை வழங்கும் விழாவிற்கு சென்றபோதுதான் திருமண உடையை மறுமுறை அணிந்திருந்தார் ஆலியா பட். திருமண உடையை மீண்டும் அணிந்த ஆலியா பட் அப்போதே மிகப்பெரிய பேசுப் பொருளானார் என்பது குறிப்பிடத்தக்கது.