தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை மியாட் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி யூனியர் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகிய உடல்நல பிரச்சினை காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்க 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் மனவேதனை அடைந்தனர். விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரேமலதா வீடியோவில் தோன்றி, கேப்டன் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார், நம்மை எல்லாம் சந்திப்பார். அதுவரை எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். மருத்துவமனை அறிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்னர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
விஜயகாந்த் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை சந்தித்தோம். அவரும் விஜயகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார். இவ்வாறு நாசர் தெரிவித்தார்.