கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. இயன்ற உதவிகளை செய்யுங்கள்: விஜய்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இயன்ற உதவிகளை செய்யுங்கள் என விஜய் டுவீட் செய்திருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து போயிருக்கிறது. புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மழை காரணமாக சென்னை வெள்ளக்காடானது. படிப்படியாக பல இடங்களில் வடிந்துவருகிறது. இருந்தாலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் வடிந்தபாடில்லை. கடுமையான மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் உணவுக்கும் அவதிப்படுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலிருந்து தன்னார்வலர்கள் சென்னைக்கு சென்று உதவ ஆரம்பித்திருக்கின்றனர். அங்கிருந்தபடியும் பலர் உணவுகள், தண்ணீர் பாட்டில்களை வழங்கிவருகின்றனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பை சரிசெய்ய திரையுலகிலிருந்து முதல் ஆட்களாக சூர்யாவும், கார்த்தியும் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தனர். அதனையடுத்து வளர்ந்துவரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். இதில் விஜய் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பலமாகவே பலரிடம் இருந்தது. ஆனால் அவர் எந்த நிதியுதவியும் செய்யவில்லை. மேலும் மிக்ஜாம் பாதிப்புகள் பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என பதிவிட்டிருக்கிறார்.