நடிகை கெளதமி அளித்த நிலமோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் குடும்பத்துடன் தலைமறைவான பாஜக பிரமுகரான அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேரை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதுபற்றி கேட்ட போது, அழகப்பன் குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரை முன்வைத்து கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக பிரமுகர் அழகப்பனுக்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அப்போது அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆவணங்கள் இருந்த 11 அறைகளுக்கு போலீஸார் சீல் வைத்ததோடு, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். கௌதமியின் இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் அழகப்பன் உட்பட அவரின் குடும்பத்தினர் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதாவது அழகப்பன், நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அவரது சகோதரர் K.M.பாஸ்கர், ஓட்டுநர் G. சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக 6 முறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து பாஜக பிரமுகர் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகினர்.
இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அமைத்தனர். மேலும், அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் அளிக்கப்படது. இதனிடையே முன் ஜாமீன் கோரி ஆறு பேரும் இரண்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், பாஜக பிரமுகர் அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள் உட்பட 6 பேரும் கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த 6 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. சென்னைக்கு வந்த பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.