சினிமாவில் 18 ஆண்டுகளாக ஹீரோயினாக ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வரும் தமன்னா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை தமன்னா, தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். மும்பையில் பிறந்த வளர்ந்த தமன்னா பள்ளி படிப்பின்போது நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மேடை நாடக குழுவில் சேர்ந்தார். ஏராளமான மேடை நாடகங்களில் தோன்றிய அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. தனது சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் தமன்னா நடித்திருந்தாலும், அவரது சினிமா பயணம் தொடங்கியது இந்தி படத்தில் தான். 15 வயதில் சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதன் பின்னர் ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த இவர், தமிழில் ரவிகிருஷ்ணாவுடன் இணைந்து கேடி படத்தில் நடித்தார்.
தமிழில் நடித்த முதல் படத்திலேயே நெகடிவ் கேரக்டரில் நடித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரி படத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனங்ளை கவர்ந்தார். தமிழில் தமன்னாகவுக்கு பிரேக் கொடுத்த படமாக தனுஷுடன் இணைந்து நடித்த பொல்லாதவன், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அயன் ஆகிய படங்கள் அமைந்தது. தமிழில் டாப் நடிகரான விஜய்யின் 50வது படமான சுறா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தமன்னா, அதன் பிறகு அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழை போல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பிரபாஸ், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என ஒரு ரவுண்டு வந்தார்.
பால் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும் தமன்னாவை ரசிகர்கள் மில்கி ப்யூட்டி என்றே அழைத்தார்கள். தனது சினிமாக்களில் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கொள்ளை கொண்டார். அவ்வப்போது சில படங்களில் ஒற்றை பாடலில் தோன்றி கவர்ச்சி நடனமாடி கிறங்கடிக்கவும் செய்துள்ளார். அப்படித்தான் உலக அளவில் ஹிட்டான கேஜிஎஃப் சேப்டர் 1 படத்தில் ஒரு பாடலில் தோன்றினார்.
தமிழ், தெலுங்கை தவிர கன்னட மொழியிலும் நடித்துள்ளார். நீண்ட நாள்களாக மலையாளத்தில் நடிக்காமல் இருந்த குறையை சமீபத்தில் திலீப் ஜோடியாக பந்த்ரா என்ற படத்தின் மூலம் தீர்த்தார். தென் இந்திய மொழிகளில் கலக்கிய பின்னர் பாலிவுட் பக்கம் ஒதுங்கிய அவர் அங்கும் அக்ஷ்ய் குமார், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்திலும், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து போலா ஷங்கர் படத்திலும் நடித்தார். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா நடனமாடியிருக்கும் காவாலா பாடல் உலக பேமஸ் ஆகியுள்ளார். சினிமா தவிர வெப் சீரிஸிலும் தலை காட்டி வரும் தமன்னா அங்கு கவர்ச்சியுடன் தனது கொள்கையை தளர்த்தி நெருக்கமான காட்சிகளியும் தோன்றி சூடேற்றி வருகிறார்.
தமிழில் கலைமாமணி விருது வென்றிருக்கும் தமன்னா, ஐஐஎஃப்ஏ, தென்னிந்திய பிலிம் பேர், ஆசியநெட் பிலிம் பேர் உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 2005 முதல் தற்போது வரை சினிமாவில் 18 ஆண்டுகளாக ஹீரோயினாக ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வரும் தமன்னா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.