இயக்குநர் மாரி செல்வராஜ் சர்ச்சை குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். அவரை விமர்சிப்பவர்களைப் பார்த்து மிகக் காட்டமாகக் கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் பாய்ந்தோடியதால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாகின. ஆகவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்புப் பணிகளிலும் மாரி செல்வராஜ் ஈடுபட்டார். அதற்கான படங்களை உதயநிதி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த பாஜகவினர் சிலர் சமூகவலைத்தளங்களில் அமைச்சருடன் இவருக்கு என்ன வேலை என்று கடுமையான விமர்சகர்களை வைத்துவந்தனர். அந்த விமர்சனத்திற்கு மாரி செல்வராஜ் நேற்று பதிலளிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு கருத்து கூறி இருக்கிறார். அது அவரது ஊர் அவர்தான் போகவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக அடித்துப் பேசி இருக்கிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழையினால் சென்னையில் வெள்ளம் வந்தது. அதைவைத்து அரசியல் செய்தார்கள். அதைவிட அதிகமாக இப்போது தூத்துக்குடியில் வெள்ளம் வந்து கரைபுரண்டு ஓடுகிறது. அங்கே அரசியல் செய்யமுடியவில்லை. ஏனென்றால் ஊரெல்லாம் வெள்ளக்காடாக இருக்கிறது. அதைவைத்து எப்படி அரசியல் செய்ய முடியும். அந்த மக்களுக்கு உதவுவதற்காக அங்கே போனால் இவன் ஏன் இங்க வந்தான் என்கிறான். இயக்குநருக்கு இங்க என்ன வேலை என்கிறான். ஏ.. அது அவன் ஊருடா அது. அவனுக்குத்தானே அங்கே எந்த இடத்துல பள்ளம் இருக்கு. எங்கே மேடு இருக்கு. எங்கே மக்கள் இருக்காங்கன்னு தெரியும். அவன் போனா கேள்வி கேட்குறாங்க. அவன் போகக்கூடாதா? எங்கள் ஊரில் வெள்ளம் வந்தா நான் தான் போகணும்.
இன்னொருத்தன் சொல்றான். இவரு ஏன் உதயநிதியை அனுப்பி வைக்கிறார் என்று. போகவேண்டுமா இல்லையா? அவர் அமைச்சர்தானே. போய் மக்களோட மக்களா அவர் நிற்கவேண்டாமா? நீ என்னோட சேர்ந்து வாழுற என்று மக்களுக்கு நாம புரியவைக்க வேண்டாமா? கீதா ஜீவன் என்னமா உழைக்கிறார். அவர் உதவி செய்யதானே வேண்டும். இந்த மழை வெள்ளத்தில் சின்ன அணில் வந்து கனியைப் பறித்துபோட்டால் கூட நாம் அதைப் பாராட்டித்தானே ஆகவேண்டும்? அதுவும் ஒரு உதவிதானே? அதைவிட்டு விட்டு அவன் ஏன் இங்க போறான்னு கேட்டா? அவன் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்திருக்கிறான். மாரிசெல்வராஜ் பத்தி தப்புத்தப்பா பேசுறானுங்க. நானும் அடக்கி அடக்கிப் பார்க்கிறேன், முடியவில்லை. உதயநிதியை ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார், என்ன வேலை வேகமாக நடக்கவில்லை என்று சொல்கிறார்களே என்று. அவர், நாங்க என்ன சுத்தி பார்க்கவா வந்திருக்கோம். உதவி செய்யத்தானே வந்திருக்கோம் என்று உதயநிதியும் நல்லாத்தான் பதில் சொல்றார்” என்று பேசிய வடிவேலு, மரம் வளர்ப்பது பற்றி காமெடி கலந்தை யதார்த்த நிலையை கதைப் போல சொன்னார். “அமைச்சர் தன் பெயருக்கு முன்னால் மா.சு என்று வைத்திருக்கிறார். உண்மையில் இந்த ஊரை மாசு படியாமல் பத்திரமாக வைத்திருக்கிறார்” என்கிறார்.